காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் பணி தீவிரம் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்

பவானிசாகர் அருகே ரூ.2½ கோடி மதிப்பீட்டில் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-10-04 23:15 GMT
ஈரோடு,

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு அடிபணியாது இந்திய சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்தவர் கொடிகாத்த குமரன். சுதந்திர போராட்ட தியாகிகளுள் குறிப்பிடத்தக்கவர். இவரது பிறந்த நாளான அக்டோபர் 4-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று சென்னிமலையில் கொடிகாத்த குமரன் பிறந்த நாள் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். திருப்பூர் சத்தியபாமா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், தோப்பு என்.டி.வெங்கடாசலம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, உ.தனியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கொடிகாத்த குமரனின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவர், கொடிகாத்த குமரனின் வாரிசுதாரர்களையும் கவுரவப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:- கிராமப்புறங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏழை, எளிய, ஆதரவற்ற பெண்களுக்கு விலையில்லாமல் வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் கால்நடை பராமரிப்பு துறை மூலம் வழங்கப்பட்டு உள்ளன. தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தினை விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 77 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர்.

கால்நடை பராமரிப்பு துறை மூலம், 814 டாக்டர்கள் நியமனம் செய்ய 1,300 பேர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. பவானிசாகர் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

விழாவில் ஆர்.டி.ஓ முருகேசன், சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்