ரசாயன ஆலையை முற்றுகையிட முயற்சி; முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 11 பேர் கைது

காரைக்குடி அருகே ரசாயன ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆலையை முற்றுகையிட சென்ற முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-04 21:45 GMT
காரைக்குடி, 


காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுநீரால் அந்த பகுதியில் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் புகையினால் பல்வேறு வியாதிகள் பரவி வருவதாக கூறி அந்த ஆலையை மூட வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை அந்த பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக அந்த போராட்டக்குழு சார்பில் நேற்று அந்த ஆலை முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் போலீசார், இந்த முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். அனுமதி மறுக்கப்பட்டதால் முற்றுகை போராட்டம் கோவிலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டதால் அதற்கு போலீசார் அனுமதி வழங்கினர். இதையடுத்து காரைக்குடி மற்றும் கோவிலூரில் உள்ள ஆலை முன்பு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

மேலும் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்கள் கழனிவாசல் வழியாக பேயன்பட்டி பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டது. இந்த போராட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் அதை தடுக்கும் வகையில் போலீசார் தரப்பில் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன.

ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி மேற்பார்வையில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, சிவகங்கை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் உள்பட 8 துணை சூப்பிரண்டுகள், 36 இன்ஸ்பெக்டர்கள், 136 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1300 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

ஆலையை மூடக்கோரி நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் காந்திய தொண்டர் மன்ற ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழ.கருப்பையா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைச்செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திலகபாமா ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி, முன்னாள் கவுன்சிலர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அழகப்பன், காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவர் பாண்டிமெய்யப்பன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சகுபர்சாதிக், அழகன் அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருக்கும்போது முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா தலைமையில் சென்ற ஒரு பகுதியினர் அந்த ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பழ.கருப்பையா, காந்திய தொண்டர் மன்ற நிர்வாகி விஜயராகவன், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் வேணுகோபால், தாலுகா செயலாளர் தட்சணாமூர்த்தி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்