அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
திண்டுக்கல்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 4-ந்தேதி தற்செயல் விடுப்பு எடுத்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்டவை ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் 31 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை. ஆசிரியர்களை பொறுத்தவரை 16 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை. இதில் 823 பேர் உரிய அனுமதியுடன் விடுப்பு எடுத்துள்ளனர். 731 பேர் அனுமதியின்றி விடுப்பு எடுத்துள்ளனர். குஜிலியம்பாறை ஒன்றியத்தில் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் 52 பள்ளிகள் பூட்டிக்கிடந்தது. இதனால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இந்த போராட்டத்தையொட்டி நேற்று காலையில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முபாரக் அலி, நிதிக்காப்பாளர் ஜேம்ஸ் அந்தோணிராஜ் உள்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வட்டார செயலாளர் கதிரவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அரசு ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.