வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் காளிமுத்து கூறியுள்ளார்.

Update: 2018-10-04 22:15 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10–ம் வகுப்பு தோல்வி மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித்தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்த பிறகும் தொடர்ந்து புதுப்பித்தல் செய்து வரும் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது 1–10–2018 முதல் 31–12–2018–ம் தேதி வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

எனவே உதவித்தொகை பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 30–9–2018 தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவு செய்திருத்தல் வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எனில் 45 வயதுக்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினர்களும் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகைப்படாமல் இருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவுஅட்டை மற்றும் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நேரில் வந்து விண்ணப்பப்படிவங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மாற்று திறனாளிகளை பொறுத்த வரை 30–9–2018 தேதியில் பதிவுசெய்து ஒரு ஆண்டு முடிவுற்றிருந்தால் போதுமானது. வயது மற்றும் வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் நவம்பர் மாத இறுதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து அளிக்க வேண்டும்.

ஏற்கனவே உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் 3 ஆண்டுகள் தொடர்ந்து பெற வேண்டுமானால் சுயஉறுதிமொழி ஆவணத்தை ஆண்டிற்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்