பழைய மதுபான ஆலையில் ரகசிய அறையில் மது பாட்டில்கள் நூற்றுக்கணக்கான பெட்டிகளில் சிக்கின
புதுவையில் உள்ள பழைய மதுபான ஆலையில் ரகசிய அறை அமைத்து நூற்றுக்கணக்கான அட்டைப் பெட்டிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் பிரெஞ்சு காலனி ஆட்சிக்காலத்தின்போது கடற்கரை சாலையில் மதுபான ஆலை ஒன்று இருந்தது. பின்னர் விடுதலைக்கு பிறகு மதுபான ஆலை, வடி சாராய ஆலையாக இயங்கி வந்தது. இந்த வடி சாராய ஆலையின் கட்டிடம் மோசமாகி இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து இங்கிருந்து வில்லியனூர் வடமங்கலத்திற்கு வடி சாராய ஆலை மாற்றப்பட்டது.
இதையடுத்து சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் அந்த இடத்தை பயன்படுத்த அரசு முடிவு செய்தது. எனவே அந்த இடத்தை சுற்றுலாத்துறையிடம் கலால் துறை ஒப்படைத்தது. தற்போது அந்த கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து கட்டிடங்களும் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
அப்போது அந்த பகுதியில் ஒரு ரகசிய அறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முழுவதுமாக அந்த அறை மூடப்பட்டு இருந்தன. பின்னர் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை பொக்லைன் எந்திரத்தை வைத்து உடைத்தனர்.
அப்போது அங்கு 2 ரகசிய அறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒரு அறை முழுவதும் அட்டைப் பெட்டிகளில் குவியல், குவியலாக மதுபாட்டில்கள் (விஸ்கி), மற்றொரு அறையில் நூற்றுக்கணக்கான அட்டைப் பெட்டிகளில் மதுபானங்கள் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக கலால்துறை அதிகாரிகளுக்கும், வடி சாராய ஆலை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர். அதன் தரம் குறித்து தெரிந்துகொள்வதற்காக மதுபானத்தை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். அந்த ரகசிய அறை மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும் என்று தெரிகிறது. அந்த அளவுக்கு அட்டைப் பெட்டிகள் அனைத்தும் அங்கு மக்கிப் போய் கிடந்தன.