இளம்பெண்ணின் உறவினர் வீட்டில் தீயை கொளுத்தி போட்ட வாலிபர்

இளம்பெண்ணை காதலித்ததை கண்டித்த கோபத்தில், அந்த பெண்ணின் உறவினர் வீட்டில் தீயை கொளுத்தி போட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் 9 பேர் உயிர் தப்பினர்.

Update: 2018-10-03 23:00 GMT
தானே,

மும்பை வடலாவை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் தானே கார்டன் ரோடு லேபர்கேம்ப் குடிசைப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

அந்த இளம்பெண்ணை கார்டன்ரோடு பகுதியை சேர்ந்த தருண் (வயது 28) என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்தார். மேலும் அவர் இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் இளம்பெண் அவரை காதலிக்க மறுத்து விட்டார்.

இதுபற்றி தனது பெற்றோர் மற்றும் தானேயில் உள்ள உறவினர்களிடம் தெரிவித்து உள்ளார். அவர்கள் வாலிபர் தருணை கண்டித்தனர்.

இது அவருக்கு கோபத்தை உண்டாக்கியது. இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை இளம்பெண்ணின் உறவினர் குடும்பத்தினர் 9 பேர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தருண் மண்எண்ணெய் ஊற்றிய துணி பொட்டலத்தில் தீயை கொளுத்தி வீட்டுக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இதில் வீட்டில் தீ பற்றியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் சத்தம் போட்டனர். உடனே வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் பதறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் வீட்டுக்குள் எரிந்த தீயும் அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

இதுகுறித்த புகாரின் பேரில் தானே நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தருணை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் செய்திகள்