காஞ்சீபுரம் பகுதிகளில் திருட்டு வழக்குகளில் 2 பேர் கைது

காஞ்சீபுரம் பகுதிகளில் திருட்டு வழக்குகளில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டது.

Update: 2018-10-03 23:30 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம், காஞ்சீபுரம் தாலுகா, பாலுச்செட்டிசத்திரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக வீடுகளின் பூட்டை உடைத்து, துணிகரமாக திருட்டு நடப்பதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.

அதையொட்டி, அவரது அதிரடி உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், பழனி, திருநாவுக்கரசு, மணிமாறன், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் டீக்காரம், கிஷோர்குமார், காவலர்கள் குமரவேல்ராஜன், சக்கரவர்த்தி, ரகுநாதன் மற்றும் போலீஸ் படையினர் குற்றவாளிகளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.

இந்த நிலையில், காஞ்சீபுரம் அருகே தென்னேரி கூட்ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, தென்னேரியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி வேகமாக ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது. உடனடியாக போலீசார் அதை தடுத்துநிறுத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மோட்டார்சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓட முயன்றனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் மணிமாறன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் டீக்காரம் மற்றும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம், துவாகுடிமலை, சமாதானபுரம் பகுதியை சேர்ந்த சிங்காரவேலன் (வயது 28), வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கே.வி.குப்பம் சித்தாராமன்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (41) என்பது தெரியவந்தது. அவர்கள் கடந்த 6 மாதங்களாக காஞ்சீபுரம், காஞ்சீபுரம் தாலுகா, வாலாஜாபாத், பாலுச்செட்டிசத்திரம் மற்றும் ஒரகடம் பகுதிகளில் பகல், இரவு நேரங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது, இதையொட்டி சிங்காரவேலன், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் திருடப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையொட்டி அந்த தங்க நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் சில நகைகளை அடகு வைத்து செலவு செய்ததும் தெரியவந்தது.

மீட்கப்பட்ட தங்க நகைகளை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி பார்வையிட்டார்.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி நிருபரிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் பகுதிகளில், 16 வழக்குகளில் திருடப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள சுமார் ஒரு கிலோ தங்கநகைகளை மீட்டோம். இதில் 2 பேரை கைது செய்துள்ளோம். மேலும், கைது செய்யப்பட்ட அவர்கள் நாமக்கல், திருப்பூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீடு புகுந்து திருடிய வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

குற்றங்களை தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், மேலும் வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். வெளியூருக்கு செல்பவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் போலீசார் அந்த வீட்டை கண்காணித்து திருட்டு நடப்பதை தவிர்ப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்