திருவான்மியூரில் ஜாமீனில் வந்து 1½ ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியை திருவான்மியூரில் தனிப்படை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்தனர்.

Update: 2018-10-03 23:00 GMT
அடையாறு,

சென்னை மயிலாப்பூர் ருதர்புரம் பகுதியை சேர்ந்தவர் அருணகிரி(வயது 36). ரவுடியாக வலம் வந்த இவர் மீது மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மெரினா மற்றும் சீர்காழி போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

2017-ம் ஆண்டு ராயப்பேட்டையை சேர்ந்த வக்கீல் கேசவன் என்பவரை கலங்கரைவிளக்கம் ரெயில் நிலையம் அருகே கத்தியால் குத்தி கொலை செய்யமுயன்ற வழக்கில் அருணகிரி தனது கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அருணகிரி, அதன் பிறகு வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.

பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட அருணகிரி மீது கோர்ட்டு 5 முறை பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து தலைமறைவான அருணகிரியை பிடிக்க மயிலாப்பூர் துணைகமிஷனர் மயில்வாகனன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மயிலாப்பூர் உதவி கமிஷனர் விஸ்வேஸ்வரய்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தலைமறைவான அருணகிரியை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில், திருவான்மியூர் கடற்கரை பகுதியில் அருணகிரி சுற்றித்திரிவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் அருணகிரியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

கடந்த 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவுக்கு துணை கமிஷனர் மயில்வாகனன் பாராட்டு தெரிவித்தார். 

மேலும் செய்திகள்