மானாமதுரை பஸ் நிலையம் அருகே அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட்டால் வாகன ஓட்டிகள் அவதி
மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட் தினசரி பலமுறை மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மானாமதுரை,
மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே ரெயில்வே கேட் உள்ளது. மானாமதுரை பைபாஸ் ரோட்டில் இருந்து வங்கிகள், தனியார் மருத்துவமனைகள், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் செல்ல முடியும். பழைய பஸ் நிலையம் அருகே ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது.
சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை கடந்துதான் பள்ளிக்கு செல்ல முடியும். தீயனூர், கீழப்பசலை, மேலப்பசலை, கீழமேல்குடி, வான்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கிராமமக்கள் பலரும் இந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் நகருக்குள் வர முடியும். தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பாதையை கடந்து நகருக்குள் சென்று வருகின்றன. மேலும் பழைய பஸ் நிலையம் அருகே ஏராளமான மரக்கடைகள் உள்ளன. கட்டுமான பொருட்கள் வாங்கவும், வர்த்தக நிறுவனங்களுக்கு பொருட்களை இறக்கவும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் இப்பாதையை கடந்துதான் நகருக்குள் நுழைய முடியும்.
ரெயில்கள் வரும்போது இந்த ரெயில்வே கேட் அடிக்கடி திறந்து மூடப்படுகிறது. சிறப்பு ரெயில்கள், சரக்கு ரெயில்கள், டிராலிகள் உள்ளிட்டவைகள் வரும்போது கூடுதலாக ரெயில்வே கேட் திறந்து மூடப்படுவதால் அந்த வழியாக வரும் வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் காத்து கிடக்க வேண்டியுள்ளது. பள்ளி மாணவ–மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை.
ரெயில்வே நிலையம் அருகில் இருப்பதால் சில சமயம் என்ஜின் மாற்றும்போது குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது.
தினசரி மதுரை–ராமேசுவரம் ரெயில், ராமேசுவரம்–மதுரை ரெயில், திருச்சி–விருதுநகர் ரெயில், விருதுநகர்–திருச்சி ரெயில், மன்னார்குடி–மானாமதுரை ரெயில், சென்னை எழும்பூர்–ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்களும் சிலம்பு எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ், ஓகா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வாராந்திர ரெயில்களும் இப்பாதையை கடந்துதான் செல்கின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு 20 தடவைக்கு மேல் ரெயில்வே கேட் மூடப்படுகிறது.
இதனால் இந்த கேட்டின் இருபுறமும் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் உள்பட வாகனங்கள் செல்ல முடியாமல் அவதியடைய வேண்டியுள்ளது. இதனை தவிர்க்க இந்த இடத்தில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.