ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு: ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2018-10-03 23:15 GMT

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக இருப்பவர் மகேஸ். இவர் ஒடுவன்பட்டி ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் அங்கு கிராமசபை கூட்டம் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் நல்லம்மாள் தலைமையில் நடைபெற்றது.

அப்போது ஊராட்சி செயலாளர் மகேசை வேறு பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர் மாற்றப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என கூறினர்.

இந்தநிலையில் ஊராட்சி செயலாளர் மகேஸ் ஒடுவன்பட்டி ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை சுமார் 150–க்கும் மேற்பட்ட பிரான்மலை பகுதியை சேர்ந்த பெண்கள் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அவரை மாற்றக்கூடாது என்று தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதைதொடர்ந்து கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா மற்றும் சிங்கம்புணரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன் மற்றும் அலுவலக மேலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து போராட்டம் நடத்திய பெண்கள் கூறும்போது, ஊராட்சி செயலாளர் மகேஸ் வந்த பிறகு கடந்த 6 மாத காலமாக குடிநீர், தெருவிளக்கு போன்ற அத்தியாவசிய தேவைகள் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. எனவே தனது கடமையை சரியாக செய்து வரும் அவரை மாற்றக்கூடாது. அப்படி பணி மாறுதல் செய்யப்பட்டால் பெரிய போராட்டம் நடத்துவோம் என்றனர்.

இதுகுறித்து மகேஸ் கூறும்போது, எனது பணியை நான் நேர்மையாகவும், உண்மையாகவும் செய்து வருகிறேன். என்னை எங்கு மாற்றினாலும் எனது உண்மையான பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.

இந்த பிரச்சினை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதாவிடம் கேட்டபோது, மகேஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது உண்மை தான். இதுவரை ஆணையை அவர் பெற்றுச் செல்லவில்லை. இந்தநிலையில் அப்பகுதி மக்கள் கோரிக்கை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

மேலும் செய்திகள்