கூடலூர் அருகே பழுதான சாலையை சீரமைத்த பொதுமக்கள்

கூடலூர் அருகே பழுதான சாலையை பொதுமக்களே சீரமைத்தனர்.

Update: 2018-10-03 23:15 GMT

கூடலூர்,

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன்–1 பகுதியில் இருந்து தேவன்–2 மற்றும் பாலவயல் உள்ளிட்ட கிராமங்களுக்கு சாலை செல்கிறது. ஆனால் இந்த சாலை பழுதாகி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக கூடலூரில் இருந்து தேவன்–2 பகுதிக்கு அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள், ஜீப்புகள், ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. ஆனால் சாலை மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு விரைவாக கொண்டு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே அந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தேவன்–1 பகுதியில் உள்ள அந்த சாலையை பொதுமக்களே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக குண்டும், குழியுமாக கிடந்த பகுதியில் மண் மற்றும் கற்களை போட்டு நிரப்பினர். சுமார் 2½ கிலோ மீட்டர் தூரம் சாலை சீரமைக்கப்பட்டது. இதனால் தற்காலிகமாக அந்த வழியாக வாகனங்கள் சிரமம் இன்றி செல்ல முடிகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக கிடக்கும் சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதற்கு நிதி ஒதுக்கி டெண்டரும் விடப்பட்டு உள்ளது. விரைவாக சாலையை புதுப்பிக்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கமும் அளித்து வருகின்றனர். ஆனால் இதுவரை சாலையை புதுப்பிக்கும் பணி நடைபெறவில்லை. எனவே நாங்களே இணைந்து சாலையில் குண்டும், குழியுமாக இருந்ததை சீரமைத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்