சீர்காழி அருகே பிறப்பென்னி வாய்க்கால் தூர்வாரும் பணி விவசாயிகள் மகிழ்ச்சி

சீர்காழி அருகே பிறப்பென்னி வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2018-10-03 22:45 GMT
சீர்காழி,

சீர்காழி அருகே ஊழியக்காரன்தோப்பு, மேலமாரியம்மன் கோவில், கோவிந்தராஜ்நகர், ஈசானியத்தெரு, செம்மங்குடி, மணவெளிதிடல், விநாயகக்குடி ஆகிய பகுதிகளுக்கு பாசன வாய்க்காலாக பிறப்பென்னி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை பொதுப்பணித்துறையினர் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக தற்போது வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு புதர்கள் மண்டி காட்சி அளிக்கிறது. இதனால் வாய்க்காலுக்கு தண்ணீர் வருவது தடைப்பட்டு, மேற்கண்ட பகுதி விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பிறப்பென்னி வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் பிறப்பென்னி வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கொள்ளிடம் முக்கூட்டு கழுமலையாறு தலைப்பில் இருந்து விநாயகக்குடி வரை 4 கி.மீட்டர் தூரத்திற்கு வாய்க்காலை பொக்லின் எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக பிறப்பென்னி வாய்க்கால் தூர்வாரப்படாததால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த பணியின்போது முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலை தூர்வார வேண்டும். அப்போது தான் வாய்க்காலில் தடையின்றி பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் என்றனர்.

மேலும் செய்திகள்