நீர்வரத்துக்கால்வாய்களை தூர்வாரக் கோரி கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

இளையான்குடியில் நீர்வரத்துக்கால்வாய்களை தூர்வாரக்கோரி கிராம மக்கள் கண்டன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-10-02 20:33 GMT

இளையான்குடி,

இளையான்குடியில் உள்ள வாள்மேல் நடந்த அம்மன் கோவில் திடலில் இளையான்குடி கண்மாய் மற்றும் நீர்நிலைகளில் வைகை தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இளையான்குடி நகர் இயற்கை கூட்டமைப்பினர் உள்பட சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது, ஒன்றியத்தில் பல வருடங்களாக மழை பெய்யாததால், இளையான்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஏற்கனவே வைகையில் வந்த நீரை தங்கள் பகுதிக்கு கொண்டுவர வேண்டும் என பலமுறை பொதுபணித்துறை மற்றும் நீர் மேலாண்மைத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும் நீர்வரத்துக்கால்வாய் முழுவதும் கருவேலமரங்கள் அடர்ந்து தண்ணீர் வரும் வழிகளை அடைத்துள்ளன. இவற்றை தூர்வாரி, கருவேலமரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என்ற புகாரின் பேரிலும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றனர்.

மேலும் மீண்டும் வைகையில் தண்ணீர் திறக்கப்போவதாக வரும் தகவலை தொடர்ந்து இளையான்குடி கண்மாய் மற்றும் நீர்நிலைகளில் வைகை தண்ணீரை நிரப்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்டத்தில் இயற்கை கூட்டமைப்பு தலைவர் காசிம், தொகுப்பாளர் உமர்கத்தாப், செயற்குழு உறுப்பினர் அயூப்அலி ஆகியோர் பேசினர். இதில் ம.ஜ.க.மாநில துணைத்தலைவர் சைபுல்லாஹ், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ராவுத்தர்நைனார், தி,மு.க நகர் செயலாளர் நஜிமுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர் தலைவர் அமீர்அலி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்