திண்டுக்கல்லில் பயங்கரம்: டீக்கடைக்காரர் வெட்டிக்கொலை

திண்டுக்கல்லில், முகமூடி அணிந்த மர்ம நபர்களால் டீக்கடைக்காரர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-10-02 21:45 GMT
திண்டுக்கல், 


திண்டுக்கல் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் வீராச்சாமி (வயது 47). இவர் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் அருகே டீக்கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் அவர், நேற்று அதிகாலை 5 மணிக்கு வழக்கம்போல கடையை திறந்து வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு இருந்த சிலரிடம், வீராச்சாமி பேசிக்கொண்டு இருந்தார்.

அந்த சமயம் 3 மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தபடி 8 பேர் கொண்ட கும்பல் வேகமாக வந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வீராச்சாமியின் டீக்கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அவருடைய கடையை நோக்கி ஓடி வந்தனர். அப்போது அவர்கள் கைகளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததால் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என நினைத்து அக்கம்பக்கத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதையடுத்து அந்த கும்பல் டீக்கடைக்குள் புகுந்து வீராச்சாமியை அரிவாள்களால் சரமாரியாக வெட்டியது. அவர் சுதாரித்துக்கொண்டு தப்பியோட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியதால் வீராச்சாமி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது. பின்னர் அக்கம்பக்கத்தினர் வீராச்சாமியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்ராஜ் மற்றும் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் மோப்பநாய் ரூபியும் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் மோப்பம் பிடித்தவாறு சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து, கடையில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

வீராச்சாமியை கொலை செய்த கும்பலை சேர்ந்த அனைவரும் முகமூடி அணிந்திருந்ததால் யாருக்கும் அவர் களை அடையாளம் காணமுடியவில்லை. இதனால் போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகள் குறித்து போலீசார் துப்புதுலக்கி வருகின்றனர்.
இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீராச்சாமியை வெட்டிக்கொன்ற கும்பல் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட வீராச்சாமிக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்த படுகொலை சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்