காதிகிராப்ட் மையங்களில் கதர் ஆடைகள் 30 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதிகிராப்ட் மையங்களில் கதர் ஆடைகள் 30 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் காந்தியின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவபடத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு காதிகிராப்ட் விற்பனை மையத்தில் கதர் சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து அவர் பேசும் போது கூறியதாவது:–
கிராமப்புற பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதே இந்த கதர் கிராம தொழில் திட்டம் ஆகும். நாம் வாங்கும் ஒவ்வொரு கதர் மற்றும் கிராம பொருட்களும், நமது கிராமங்களில் வாழும் லட்சக்கணக்கான ஏழை, எளிய குடும்பத்தார்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 20 கிராமிய நூல் உற்பத்தி நிலையங்கள் மூலமாக 504 பெண் நூற்பாலர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரூ.1 கோடியே 78 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிற்கு கதர் மற்றும் பாலியஸ்டர் நூல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 10 கதர் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நேபாளி தறி அலகும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலமாக 131 நெசவாளர்களுக்கு நேரடியாகவும், சுமார் 200 பேர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் வாரம் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரம் வரை நெசவு கூலி பெறுகின்றனர். கடந்த ஆண்டு ரூ.3 கோடியே 52 லட்சத்து 14 ஆயிரத்திற்கு கதர் மற்றும் பாலியஸ்டர் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த துணிகள் காதிகிராப்ட் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் 5 காதி கிராப்ட் செயல்பட்டு வருகிறது.
இதன்படி கடந்த 2017–2018–ம் ஆண்டிற்கு ரூ.1 கோடியே 53 லட்சம் கதர் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.1 கோடியே 53 லட்சத்து 9 ஆயிரத்திற்கு கதர் பட்டு, உல்லன் மற்றும் பாலியஸ்டர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டது. இது போல சோப்பு வகைகள், காலணிகள், ஊதுபத்தி, கம்யூட்டர் சாம்பிராணி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ரூ.29 லட்சத்து 62 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டை போலவே 2018–2019–ம் ஆண்டிற்கு ரூ.2 கோடியே 53 லட்சம் கதர் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியில் கதர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 5 காதி கிராப்ட் கடைகளும், 5 தற்காலிக கதர் விற்பனை நிலையங்களும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. கிராமப்புற ஏழைகளின் கனவை நனவாக்கும் வகையில் கதர் ரகங்களை அதிகம் கொள்முதல் செய்து ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு கதர் ஆடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகங்களையும் கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, கதர்கிராம தொழில்கள் உதவி இயக்குனர் ரவிக்குமார் மற்றும் கதர் கிராம அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.