மழை காலங்களில் நொய்யலில் சாயக்கழிவுநீர் கலப்பதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்

நொய்யலில் சாயக்கழிவுநீர் கலப்பதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-10-02 22:45 GMT

திருப்பூர்,

 திருப்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆடைகளை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றும் பணியில் சாயப்பட்டறைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. இதன்படி திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிறிய மற்றும் பெரிய சாயஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

 இந்த நிலையில் பல நிறுவனங்கள் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நீர்நிலைகளிலும் விவசாய நிலங்களிலும் வெளியேற்றுகின்றன. இதை தடுப்பதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் தொடர்ந்து சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மழை அதிகமாகப் பெய்யும் காலங்களில் சாய ஆலை நிறுவனத்தினர் அதிகம் சாயக் கழிவுகளை வெளியேற்றி வருகின்றனர். தற்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாய ஆலைகளில் இருந்து பல நிறுவனத்தினர் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்ற வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இது குறித்து திருப்பூரில் உள்ள விவசாயிகள் சிலர் கூறியதாவது:– திருப்பூருக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் சாய ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் சட்டவிரோதமாக செயல்படும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டாலும் கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை. இதனால் சட்டவிரோத நிறுவனங்கள் எந்த வித தயக்கமும் இன்றி தொடர்ந்து சுத்திகரிக்காமல் சாயக்கழிவை வெளியேற்றும் பணியி?ல் ஈடுபட்டு வருகின்றனர்.

 தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நல்ல மழை பெய்யும் பட்சத்தில் நொய்யல் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ள பெருக்கு ஏற்படும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சட்டவிரோத நிறுவனங்கள் சாயக்கழிவுநீரை அதிக அளவில் திறந்துவிட வாயப்பு உள்ளது. இதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க ஒரு தனி குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்