ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல் முன்னாள் மேலாளர் கைது

சென்னையில் ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-10-01 22:00 GMT
சென்னை,

சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் வினோத்சித்தி (வயது 55). இவருடைய மனைவி கிரன்வேளாகுபடி(52). இவர் ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவர் சென்னை அண்ணாசாலை போலீஸ்நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதில், ‘தன்னிடம் கருப்பு பணம் இருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்து விடுவேன் என்று மர்ம நபர் ஒருவர் ரூ.60 லட்சம் பணம் கேட்டு செல்போன் மூலம் மிரட்டல் விடுத்து வருகிறார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பேரில் கிரன்வேளாகுபடிக்கு மிரட்டல் விடுத்தது கொளத்தூர் திருப்பதி நகர் முதல் மெயின் ரோடு, 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த ரெனிட்டைசன்(24) என்பது தெரிய வந்தது.

இவர் கிரன்வேளாகுபடி நடத்தி வரும் ஓட்டலில் கடந்த 4 ஆண்டுகளாக விற்பனை பிரிவு மேலாளராக பணியாற்றி வந்ததும், சில மாதங்களுக்கு முன்பு அப்பணியில் இருந்து நின்றதும் தெரிய வந்தது. இதையடுத்து ரெனிட்டைசன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் சேர்ந்து கிரன்வேளாகுபடியிடம் பணம் பறிக்க திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுரேசை கைது செய்வதற்கான நடவடிக்கையில் அண்ணாசாலை போலீசார் களம் இறங்கி உள்ளனர். கைது செய்யப்பட்ட ரெனிட்டைசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்