காங்கேயத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது

காங்கேயத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-30 23:15 GMT
காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் முஸ்லிம் வீதியை சேர்ந்தவர் ஆருண்பாய் (வயது 45). ரியல் எஸ்டேட் புரோக்கர். இவர் காங்கேயம் சந்தைபேட்டையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், அவரிடம் “2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பதாகவும், அதை கடைகளில் கொடுத்து மாற்றினால் விரைவில் பணக்காரராக ஆகி விடலாம்” என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

அவர்களின் திட்டத்தை முழுமையாக கேட்டுக்கொண்ட ஆருண்பாய், அவர்களிடம் வேறு இடத்திற்கு சென்று பேசலாம் என்று கூறியுள்ளார். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆருண்பாய் தனது நண்பர் ஒருவரை துணைக்கு அழைத்துள்ளார். இதையடுத்து ஆருண்பாயும், அவருடைய நண்பரும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் அந்த 2 ஆசாமிகளையும் அழைத்துக்கொண்டு காங்கேயம் போலீஸ் நிலையம் சென்று போலீசாரிடம் ஒப்படைத்து நடந்த விவரத்தை கூறினார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் (பொறுப்பு) அவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஒருவர் காங்கேயம் அருகே உள்ள படியூர் வடக்குபாளையத்தை சேர்ந்த சாமிநாதன் (43) என்றும், மற்றொருவர் காங்கேயம் சத்யா நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஸ் (31) என்றும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 2 பேரையும் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;-

பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சாமிநாதன், சில மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. இவர் அதற்கு முன்பு அடிக்கடி வெளியே செல்லும்போது சதீசின் ஆட்டோவை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போதுதான் இருவரும் சேர்ந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டால் விரைவில் பணக்காரர்களாக ஆகி விடலாம் என்று திட்டம் தீட்டி உள்ளனர்.

இதையடுத்து லேப் டாப், ஸ்கேனர், பிரிண்டர் மற்றும் கலர் ஜெராக்ஸ் மெஷினை கொண்டு வந்து சாமிநாதன் வீட்டில் வைத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்து ஸ்கேன் செய்து பின்னர் பிரிண்ட் எடுத்துள்ளனர். பின்னர் அதை கலர் ஜெராக்ஸ் எடுத்துள்ளனர். அதன்படி மொத்தம் 8 நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் 8-யும் கையில் வைத்துக்கொண்டு ஆருண்பாயிடம் விவரத்தை கூறியபோதுதான் அவர், இவர்களை போலீசில் பிடித்து கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் சாமிநாதனையும், சதீசையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் 8 -யும் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த காங்கேயம் பொன்னிநகரை சேர்ந்த ராஜ்குமார் (46) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து லேப் டாப், ஸ்கேனர், பிரிண்டர், ஜெராக்ஸ் மெஷின் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்