நூதன முறையில் ஓய்வுபெற்ற மாநகராட்சி ஊழியரிடம் ரூ.11 லட்சம் மோசடி கும்பலுக்கு வலைவீச்சு

நூதன முறையில் ஓய்வுபெற்ற மாநகராட்சி ஊழியரிடம் ரூ.11 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-09-29 23:00 GMT
மும்பை, 

நூதன முறையில் ஓய்வுபெற்ற மாநகராட்சி ஊழியரிடம் ரூ.11 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

காப்பீடு நிறுவனத்தின் பெயரில்...

மும்பை தார்டுதேவ் பகுதியில் ஓய்வுபெற்ற மாநகராட்சி ஊழியர் (வயது65) ஒருவர் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு சமீபத்தில் அழைப்பு ஒன்று வந்தது. அப்போது எதிர்முனையில் பேசிய நபர், தான் ஐதராபாத்தில் செயல்படும் காப்பீடு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் போடப்பட்டு இருந்த காப்பீடு முதிர்ச்சி அடைந்துவிட்டதாகவும் கூறினார். மாநகராட்சி ஊழியர் தான் அப்படி எதுவும் காப்பீடு செலுத்தவில்லை என கூறினார்.

இதையடுத்து அதிகாரி போல பேசிய மற்றொரு நபர், காப்பீடு பாக்கி தொகை ரூ.11 லட்சத்தை செலுத்தினால் முதிர்ச்சி தொகை ரூ.98½ லட்சம் கிடைக்கும் என அவரிடம் ஆசை வார்த்தை கூறினாா்.

ரூ.11 லட்சம் மோசடி

இதை உண்மையென நம்பிய மாநகராட்சி ஊழியர் செல்போனில் பேசிய கும்பலை சேர்ந்தவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளாக ரூ.11 லட்சத்தை அனுப்பி வைத்தார். பணத்தை அனுப்பிய பிறகு அந்த கும்பல் அவரின் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சம்பவம் குறித்து தார்டுதேவ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் ஓய்வுபெற்ற மாநகராட்சி ஊழியரிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்