மின்னணு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு - கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மின்னணு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றதை கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2018-09-29 23:15 GMT
நாகப்பட்டினம்,

நாகை வெளிப்பாளையம் தலைமை மருத்துவமனை பின்புறம் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மின்னணு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு 3,800 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்துள்ளன. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்க மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த மாதிரி வாக்குப்பதிவு பெங்களூரு பி.இ.எல் நிறுவன பொறியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மூலம் நடைபெற்றது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் விரும்பினால், அவர்களே மாதிரி வாக்குப்பதிவு நடத்த அனுமதிக்கப்படும். முதல்நிலை சோதனை பணி முடிந்த பின்பு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும். வாக்குப்பதிவு எந்திரங்கள் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், நாகை சப்-கலெக்டர் கமல் கிஷோர், தேர்தல் தாசில்தார் கபிலன், நாகை தாசில்தார் இளங்கோவன், மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்