திண்டிவனம் அருகே சரக்கு வாகனம் மீது லாரி மோதல்; 2 பேர் பலி
திண்டிவனம் அருகே சரக்கு வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
திண்டிவனம்,
சென்னை நீலாங்கரை வடக்கு சரஸ்வதி நகரை சேர்ந்தவர் எட்வர்டு(வயது 58). இவர் சென்னை ராயபுரம் பக்கிரிசாமி தெருவை சேர்ந்த செல்வம் மனைவி பானுமதி(65), வெங்கடாசலம் தெருவை சேர்ந்த அந்தோணி சுரேஷ் டைட்டஸ்(33), இவருடைய மனைவி குளோரியா(30), வெங்கடேசன் தெருவை சேர்ந்த பெரியராம் மகன் விக்னேஷ்(23), நீலாங்கரை முதல்தெருவை சேர்ந்த டேவிட் மனைவி ஆரோக்கியமேரி(44) ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை ஒரு சரக்கு வாகனத்தில் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடிக்கு புறப்பட்டார். வாகனத்தை அந்தோணி சுரேஷ் டைட்டஸ் ஓட்டினார்.
இவர்களது வாகனம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கர்ணாவூர்பேட்டையில் சென்னை–திண்டிவனம் புறவழிச்சாலையில் இரவு 11.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது இவர்களுக்கு பின்னால் சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த லாரி ஒன்று அந்தோணி சுரேஷ் டைட்டஸ் ஓட்டி வந்த சரக்கு வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி எட்வர்டு உள்ளிட்ட 6 பேரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த திண்டிவனம் இன்ஸ்பெக்டர்கள் சீனிபாபு, சாம்பென்னட்(போக்குவரத்து) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி எட்வர்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
பானுமதி மட்டும் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை 3 மணியளவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்தோணி சுரேஷ் டைட்டஸ் உள்ளிட்ட 4 பேரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.