குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி, பொதுமக்கள் இட்லி சாப்பிட்டு நூதன போராட்டம்

குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தா.பேட்டையில் பொதுமக்கள் இட்லி சாப்பிட்டு நூதன போராட்டம் நடத்தினர். மேலும் 2 இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

Update: 2018-09-29 23:00 GMT
தா.பேட்டை,

திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் வசிக்கும் பொதுமக்களுக்கு முசிறியை அடுத்த அய்யம்பாளையம் காவிரி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக குடிநீர் சரிவர வழங்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தநிலையில் கடந்த 8 நாட்களாக தா.பேட்டை பகுதி மக்களுக்கு காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை. நேற்று 5 நிமிடம் மட்டுமே குடிநீர் வந்ததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதையடுத்து பொதுமக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இணைந்து காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அலுவலகத்தின் முன்பாக கூடிய பொதுமக்கள் இட்லி சாப்பிட்டு குடிப்பதற்கு குடிநீர் கேட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.

சிலர் சாப்பிட்ட இலைகளை அலுவலகத்திற்குள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தா.பேட்டை பகுதி மக்களுக்கு தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்கிட உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக, இதே கோரிக்கையை வலியுறுத்தி தா.பேட்டை கடைவீதியிலும், துறையூர் செல்லும் சாலையில் உள்ள நெசவாளர் காலனி அருகேயும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்