காற்றாலை நிறுவனத்தினர் தோட்டத்தில் சாலை அமைக்க நடவடிக்கை: விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
கயத்தாறு அருகே காற்றாலை நிறுவனத்தினர் தோட்டத்தில் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கயத்தாறு,
கயத்தாறு அருகே காற்றாலை நிறுவனத்தினர் தோட்டத்தில் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் காற்றாலை
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் ஊருக்கு கீழ் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த காற்றாலைக்கு தேவையான பொருட்கள் கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதாலும், அதற்கான பாதையை ஏற்படுத்த வேண்டும் என்பதாலும் தற்போது இலந்தைகுளம் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அந்த சாலையானது இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயியான அய்யாச்சாமிக்கு சொந்தமான தோட்டத்தின் வழியே அமைக்கப்பட இருந்தது. அதற்காக காற்றாலை பணியாளர்கள் அய்யாச்சாமியிடம் இடத்தை கேட்டனர். ஆனால் அவர் கொடுத்த மறுத்துவிட்டார்.
தீக்குளிக்க முயற்சி...
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் காற்றாலை பணியாளர்கள் அய்யாச்சாமிக்கு சொந்தமான தோட்டத்தின் முள்வேலிகளை பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றிவிட்டு அங்கு அத்துமீறி நுழைந்து சாலை அமைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அய்யாச்சாமி மற்றும் குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பணியை நிறுத்த கோரி, உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீக்குளிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தி, இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது தனியார் காற்றாலை நிறுவனம் அந்த இடத்தை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அய்யாச்சாமி அந்த இடத்தை நான் விற்கவில்லை என்று தெரிவித்தார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தாசில்தார் உத்தரவின் பேரில் நிலத்தை சரியான முறையில் அளவீடு செய்த பின்னர் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். அதுவரை இந்த பணியை நிறுத்த வேண்டும் என்று காற்றாலை நிறுவன பணியாளர்களிடம் தெரிவித்தனர். அதன்படி சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் அய்யாச்சாமியையும், அவரின் குடும்பத்தினரையும் போலீசார் சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.