வள்ளியூரில் மது குடிக்க பணம் கொடுக்காததால் பெண் அடித்துக்கொலை போலீசில் கணவர் சரண்

வள்ளியூரில் மது குடிக்க பணம் கொடுக்காததால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவர், போலீசில் சரண் அடைந்தார்.

Update: 2018-09-29 22:00 GMT
பணகுடி, 

வள்ளியூரில் மது குடிக்க பணம் கொடுக்காததால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவர், போலீசில் சரண் அடைந்தார்.

பணம் கேட்டு தகராறு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் கலையரங்கம் தெருவை சேர்ந்தவர் ஆண்டிக் கோனார் மகன் நம்பி (வயது 47). மாடு புரோக்கர் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி பேச்சியம்மாள் (35). நம்பிக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மதுகுடிக்க பணம் கேட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து உள்ளார். பின்னர் மது குடித்துவிட்டு வந்து பேச்சியம்மாளை அடித்து துன்புறுத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் நம்பி மது குடிக்க பேச்சியம்மாளிடம் பணம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அடித்துக் கொலை

இதில் ஆத்திரம் அடைந்த நம்பி, அங்கு வீட்டுக்குள் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து பேச்சியம்மாளை அடித்து உதைத்தார். இதில் பேச்சியம்மாள் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

பின்னர் நம்பி, நேராக வள்ளியூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு நடந்த விவரத்தை எடுத்துக்கூறி போலீசாரிடம் சரண் அடைந்தார்.

கைது

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் பேச்சியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நம்பியை கைது செய்தனர்.

மது குடிக்க பணம் கொடுக் காததால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை செய்யப்பட்ட பேச்சியம்மாளுக்கு கண்ணன் (11), ஆகாஷ் (9) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் ஆங்கில பள்ளியில் படித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்