சிறுவாணி அணைக்கு செல்லும் வழியில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற முதியவர் கைது
சிறுவாணி அணைக்கு செல்லும் வழியில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற முதியவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மர்ம கும்பலை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பேரூர்,
கோவை வனக்கோட்டம் போலாம்பட்டி வனச்சரகம் கோவை குற்றால வனப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. இந்த மரங்களை கடந்த சில நாட்களாக மர்ம ஆசாமிகள் வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறையினர் அங்குள்ள வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சிறுவாணி அணைக்கு செல்லும் சாலையில் உள்ள இரும்பு பாலம் அருகே வனப்பகுதியில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினருக்கு மரம் வெட்டும் சத்தம் கேட்டது. இதனால் உஷார் அடைந்த அவர்கள் சத்தம் வந்த திசையை நோக்கி நடந்து சென்றனர்.
அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டிக்கொண்டிருந்தனர். அந்த கும்பலை வனத்துறையினர் சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பி ஓட முயன்றனர். இருப்பினும் வனத்துறையினர் அவர்களை துரத்தியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். மீதம் உள்ள 5 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் பிடிபட்ட நபரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அவர் கேரள மாநிலம் மன்னார்காடு வெல்லகுளம் பகுதியை சேர்ந்த ராமன் (வயது 65) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அந்த கும்பல் வெட்டி கடத்த முயன்ற 60 கிலோ சந்தன மரத்துண்டுகளை கைப்பற்றினர்.
மேலும் தப்பி ஓடிய 5 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இதுதொடர்பாக கைதுசெய்யப்பட்ட ராமனிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தன மரத்தை மர்ம கும்பல் வெட்டி கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.