உடற்பயிற்சியாளரை தாக்கியதாக கைது: நடிகர் துனியா விஜய் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
உடற்பயிற்சியாளரை தாக்கியதாக கைதான நடிகர் துனியா விஜய் ஜாமீன் கோரிய வழக்கு விசாரணையை பெங்களூரு செசன்சு கோர்ட்டு நாளைக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்துள்ளது.
பெங்களூரு,
உடற்பயிற்சியாளரை தாக்கியதாக கைதான நடிகர் துனியா விஜய் ஜாமீன் கோரிய வழக்கு விசாரணையை பெங்களூரு செசன்சு கோர்ட்டு நாளைக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்துள்ளது.
நடிகர் துனியா விஜய் கைது
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் துனியா விஜய். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 22-ந் தேதி இரவு பெங்களூரு வசந்த்நகரில் வைத்து உடற்பயிற்சியாளர் மாருதிகவுடாவை காரில் கடத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய புகாரின் பேரில் ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து துனியா விஜய் உள்பட 4 பேரை கைது செய்து பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், துனியா விஜய் உள்பட 4 பேரும் ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனுவை பெங்களூரு கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, துனியா விஜய் பெங்களூரு செசன்சு கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது செசன்சு கோர்ட்டு நீதிபதி ராமலிங்கேகவுடா நேற்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின்போது, தாக்குதலுக்கு உள்ளான மாருதி கவுடா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளதையும், டாக்டர் அளித்த அறிக்கையையும் நீதிபதியிடம் துனியா விஜய் சார்பில் ஆஜரான வக்கீல் வழங்கியதோடு, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.
அப்போது துனியா விஜய்க்கு ஜாமீன் வழங்க கூடாது என்று எதிர்தரப்பு சார்பில் கோரப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமலிங்கேகவுடா, துனியா விஜய் ஜாமீன் வழக்கின் விசாரணையை அக்டோபர் 1-ந் தேதி (நாளை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால், சிறையிலேயே துனியா விஜய் இருக்கிறார்.
ரசிகர்கள் சிறப்பு பூஜை
முன்னதாக, துனியா விஜய்க்கு ஜாமீன் கிடைக்க வேண்டி அவருடைய ரசிகர்கள் நேற்று பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தது குறிப்பிடத்தக்கது.