கோயம்பேடு மார்க்கெட் அருகே பெட்ரோல் ‘பங்க்’கில் தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு

கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள பெட்ரோல் ‘பங்க்’கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Update: 2018-09-28 23:11 GMT
பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே ஜெயந்தி என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் ‘பங்க்’ ஒன்று உள்ளது. இங்கு நேற்று கொருக்குப்பேட்டையில் இருந்து பெட்ரோல் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி வந்தது. இந்த லாரியை டிரைவர் மாதவன் ஓட்டி வந்தார். இந்த லாரியில் 15 ஆயிரம் லிட்டர் டீசலும், 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோலும் இருந்தது. டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோலை இறக்கும் பணியில் மாதவன் ஈடுபட்டார். அப்போது திடீரென தீப்பிடித்தது. இந்த தீ டேங்கர் லாரி மற்றும் பெட்ரோல் ‘பங்க்’கின் மேற்கூரைக்கும் பரவியது.

சேதம் தவிர்ப்பு

இதனால் பதறிப்போன ஊழியர்கள் அங்கிருந்த மணல் மற்றும் தீயணைப்பு கருவிகளை கொண்டு உடனடியாக தீயை அணைத்தனர். லாரி கிளனர் சாதுர்யமாக செயல்பட்டு லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஓரமாக நிறுத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோயம்பேடு தீயணைப்புப்படையினர் மற்றும் கோயம்பேடு போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பெட்ரோல் ‘பங்க்’கில் வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் பணி நிறுத்தப்பட்டது. பெட்ரோல் ‘பங்க்’ ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்