எனது தலைமையில் உண்ணாவிரத போராட்டம் - தனியார் சர்க்கரை ஆலைக்கு கலெக்டர் எச்சரிக்கை

வருகிற 25-ந் தேதிக்குள் பணத்தை கொடுக்கவில்லை என்றால் எனது தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தனியார் சர்க்கரை ஆலைக்கு கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2018-09-28 22:51 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு பல மாதங்களாகியும் ரூ.11½ கோடியை பட்டுவாடா செய்யாமல் உள்ள போளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை ஆலை கடந்த 8 மாதங்களாக கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கு பணம் தரவில்லை.

வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் தொகையை கேட்டு வங்கி நிர்வாகம் நெருக்கடி கொடுக்கிறது. பணத்தை கொடுக்காமல் மோசடி செய்யும் நிர்வாகம் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு கொள்முதல் செய்ததற்கான தொகையை தரவில்லை என்றால் ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று கடந்த கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தீர்கள். உங்கள் மீது உள்ள மரியாதையால் நாங்கள் சென்றோம்.

இந்த மாதமும் அவர்கள் பணம் கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர். எதிர்காலத்தில், கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்ப அனுமதி கொடுங்கள் என்று அவர்கள் பேசினர்.

பின்னர், கூட்டத்தில் பங்கேற்ற சர்க்கரை ஆலை நிர்வாக பிரதிநிதியிடம், கலெக்டர் கந்தசாமி பேசினார். அவரிடம் இருந்து உறுதியான பதில் கிடைக்காததால், ஆலையின் பொது மேலாளரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் கலெக்டர் கந்தசாமி கூறுகையில், வருகிற 25-ந் தேதிக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் பணம் வழங்கப்படும் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், பணத்தை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என்றனர்.

அந்த சமயத்தில் விவசாயிகளின் கோபத்தை தணிக்கும் வகையில், முன் கூட்டியே தயார் செய்து வைத்திருந்த பேனர், கலெக்டரின் அனுமதியுடன் காண்பிக்கப்பட்டது. அதில், கரும்பு கொள்முதல் செய்ததற்கு பணம் வழங்காததை கண்டித்து, மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலை முன்பு உண்ணாவிரத போராட்டம் 28-ந் தேதி (நேற்று) நடத்தப்படும் என்று எழுதப்பட்டிருந்தது.

பின்னர் கலெக்டர் கந்தசாமி பேசுகையில், வருகிற 25-ந் தேதிக்குள் சர்க்கரை ஆலை நிர்வாகம் பணத்தை கொடுக்கவில்லை என்றால், எனது தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். நான் வந்து உட்கார்ந்தால், வீட்டில் ஒரு விவசாயி கூட இருக்க மாட்டார்கள். ஆலைக்கு ‘சீல்’ வைத்தால், எனது பாக்கெட்டில் சாவி வந்துவிடும். ஆனால் உங்கள் பாக்கெட்டில் பணம் வராது. மீண்டும் ஒரு கருப்பு வரலாற்றை நான் செய்ய விரும்பவில்லை. பணத்தை பெற்றுத் தருவதுதான் எனது நோக்கம் என்றார்.

கலெக்டரின் அறிவிப்பை கேட்டதும், விவசாயிகள் கைத்தட்டி வரவேற்றனர்.


மேலும் செய்திகள்