மகளின் சடங்குக்கு விடுமுறை தராததால் மின்வாரிய ஊழியர் தீக்குளிப்பு

மகளின் சடங்குக்கு விடுமுறை தராததால் மனமுடைந்த மின்வாரிய ஊழியர் தீக்குளித்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2018-09-28 23:00 GMT
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள புதுரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 44). இவர் பொம்மிடி மின்சார வாரியத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அம்பிகா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று சண்முகம் பென்னாகரம் அருகே உள்ள பருவதனஅள்ளி கிராமத்திற்கு சென்றார்.

பின்னர் அங்குள்ள மயானத்தில் உடலின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இவரின் அலறல் சத்தம் மற்றும் புகை வந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜியலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்திடம் விசாரித்தனர்.

அப்போது சண்முகம், உயர் அதிகாரி ஒருவர், தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடத்த விடுமுறை தராமல் வேலை செய்யுமாறு வற்புறுத்தியதால் மனம் உடைந்து தீக்குளித்ததாக கூறி உள்ளார். இதையடுத்து போலீசார், தீயில் கருகிய சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 80 சதவீத தீக்காயம் அடைந்த சண்முகத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளுக்கு சடங்கு நடத்துவதற்கு விடுமுறை தராததால் மனமுடைந்த மின்வாரிய ஊழியர் தீக்குளித்த சம்பவம் மற்ற ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்