கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மருந்து விற்பனை பிரதிநிதியை கொன்ற தந்தை

பல பெண்களுடன் இருந்த தொடர்பை கைவிட கூறியதால் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மருந்து விற்பனை பிரதிநிதியை கொன்று விட்டு தலைமறைவான தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2018-09-28 22:30 GMT
தஞ்சாவூர், 


தஞ்சை அண்ணா நகர் 13-வது தெருவில் வசித்து வருபவர் முகமது தாகீர்(வயது 52). இவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன்கள் ரியாஷ் சம்சுதீன், அப்துல்ரகுமான், இப்ராகீம். முகமது தாகீரை தவிர மற்ற அனைவரும் ஈரோட்டில் வசித்து வருகின்றனர். அங்கு மருந்து விற்பனை பிரதிநிதியாக அப்துல் ரகுமான் வேலை பார்த்து வந்தார். இவர், விடுமுறை நாட்களில் தனது தந்தையை பார்ப்பதற்காக தஞ்சைக்கு வந்து செல்வது வழக்கம். அதேபோல தனது தம்பி இப்ராகீமுடன் அப்துல் ரகுமான் தஞ்சைக்கு வந்தார். இந்த நிலையில் முகமது தாகீர் தனக்கு சொந்தமான வணிக வளாகத்தை விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்டார்.

இதை அறிந்த அவரது மகன்கள், வணிக வளாகத்தை விற்பனை செய்தால் அந்த பணத்தை மட்டுமின்றி பிற சொத்துக்களை எல்லாம் தனது தாயார் மற்றும் தங்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் அதற்கு முகமது தாகீர் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக தந்தை, மகன்களுக்கு இடையே தகராறு நடந்து வந்தது. அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் தந்தை- மகன்களை சமாதானம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அப்துல் ரகுமான் தலைநசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில் கிரைண்டர் கல் கிடந்தது. இதை பார்த்த பக்கத்து வீட்டினர் இது குறித்து தஞ்சை தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

முகமது தாகீருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து உள்ளது. இந்த தொடர்பால் முகமது தாகீர் அடிக்கடி மளிகை கடையை பூட்டி விட்டு வெளியூர்களுக்கு சென்று விடுவார். இதை அறிந்த அவரது மனைவி மற்றும் மகன்கள் பிற பெண்களுடன் உள்ள தொடர்பை கைவிடுமாறு முகமது தாகீரிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதை கேட்காமல் அவர், மனைவியை அடித்து உதைத்ததால் முகமது தாகீரை தவிர மற்ற அனைவரும் ஈரோட்டிற்கு சென்று வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இருந்தாலும் கடை வரு மானம் மற்றும் வணிக வளாகத்தின் வாடகை பணத்தை எல்லாம் பல பெண்களுக்கு தந்தை செலவு செய்வதாக மகன்களுக்கு தகவல் கிடைத்தது. பல பெண்களுடன் தொடர்பு இருப்பதால் சொத்துக்களை விற்று விடுவாரோ? என்று பயந்து அவரை கண்காணிப்பதற்காக மகன்கள் 2 பேர் தஞ்சைக்கு வந்து தந்தையிடம் இது தொடர்பாக கேட்டனர். ஆனால் பெண்களுடன் உள்ள தொடர்பை கைவிட மறுத்ததுடன் வணிக வளாகத்தை விற்பதற்கு முகமது தாகீர் முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனால் தந்தை, மகன்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் வந்து சமசரம் செய்து வைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு தந்தை, மகன்கள் 2 பேரும் வீட்டில் தூங்கி விட்டனர். நேற்று அதிகாலை முகமது தாகீர் தூங்கி எழுந்தார். அப்போது அறையில் தூங்கி கொண்டிருந்த அப்துல்ரகுமானை பார்த்தபோது அவருக்கு மிகுந்த ஆத்திரம் வந்தது. உடனே வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து வந்து, அப்துல் ரகுமான் தலையில் போட்டு அவரை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று உள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

பின்னர் கொலை செய்யப்பட்ட அப்துல் ரகுமானின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இந்த கொலை குறித்து இப்ராகீம், தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முகமது தாகீரை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்