ஆன்–லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி திருப்பூர் மாவட்டத்தில் 1,100 மருந்து கடைகள் அடைப்பு

ஆன்–லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி திருப்பூர் மாவட்டம் முழுவதும் 1,100 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

Update: 2018-09-28 22:45 GMT

திருப்பூர்,

நாடு முழுவதும் அனைத்து விதமான மருந்து பொருட்களும் ஆன்–லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வர்த்தகத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருந்து பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில், நாடு முழுவதும் 6 லட்சம் மருந்து கடைகளும், தமிழகத்தில் 30 ஆயிரம் மருந்து கடைகளும், திருப்பூர் மாவட்டத்தில் 1,100 மருந்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆஸ்பத்திரிகளுடன் இணைந்து செயல்படும் மருந்துகடைகள் மட்டும் நேற்று செயல்பட்டன. காலை முதல் மாலை வரை கடைகள் மூடப்பட்டிருந்தன.

இதனால் பல இடங்களில் மருந்துகள் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். அவசர கதியில் மருந்து பொருட்கள் தேவைப்பட்டவர்கள் மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்து கடைகளில் சென்று மருந்து பொருட்களை வாங்கி சென்றனர். பின்னர் மாலை 6 மணி முதல் வழக்கம் போல மருந்து கடைகள் செயல்பட்டன. ஆன்–லைன் வர்த்தகத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மருந்து வணிகர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி சத்தியபாமா எம்.பி.யிடமும் மனு கொடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் குறித்து மருந்து வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:–

ஆன்–லைனில் விற்பனை செய்யப்படும் மருந்து பொருட்களின் தரம் பற்றி அறிந்து கொள்ள முடியாது. போலி மருந்து சீட்டுகளை உருவாக்கவும் சாத்தியமுள்ளது. இதனால் யார் வேண்டுமானாலும் மருந்துகளை ஆன்–லைனில் பெற முடியும். தூக்க மாத்திரை, கருத்தடை மாத்திரை, வீரியமிக்க மாத்திரை போன்றவற்றை டாக்டர்கள் அறிவுரை இல்லாமலே வாங்க வாய்ப்பு உள்ளது. போதை மருந்துகளும் இதில் வாங்கலாம்.

இதனாலேயே ஆன்–லைன் வர்த்தகத்திற்கு எதிராக போராட்டம் நடக்கிறது. இந்த ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தால் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ.3 கோடி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆன்ல்–லைன் வர்த்தகத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்