8ஆண்டுகளுக்கு முன்பு மனைவி, மகளை கடத்தி சென்ற கள்ளக்காதலனை தட்டிக்கேட்ட தொழிலாளிக்கு அடி-உதை 4 பேர் கைது

ஆழ்வார்குறிச்சி அருகே மனைவி, மகளை கடத்தி சென்ற கள்ளக்காதலனை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்து உதைக்கப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-28 21:00 GMT
கடையம், 

ஆழ்வார்குறிச்சி அருகே மனைவி, மகளை கடத்தி சென்ற கள்ளக்காதலனை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்து உதைக்கப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி மனைவி கடத்தல்

ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தபிள்ளையூர் அண்ணாநகரை சேர்ந்த கபேரியல் மகன் செல்வின்தாஸ்(வயது45). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காணிக்கை பிரேமாவுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயது மகள் இருந்தார்.

அதே பகுதியை சேர்ந்த அருள் பிச்சை மகன் பால் கிறிஸ்டோபர்(36). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காணிக்கை பிரேமாவுக்கும், பால்கிறிஸ்டோபருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இவர்களது கள்ளத்தொடர்பு இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காணிக்கை பிரேமாவையும், அவருடைய மகளையும் பால் கிறிஸ்டோபர் சென்னைக்கு கடத்தி சென்று விட்டார். அங்கு வாடகை வீட்டில் அவர்களுடன் பால்கிறிஸ்டோபர் குடும்பம் நடத்தி வந்தார். இதற்கிடையில் மனைவி, மகளை மீட்டு தருமாறு செல்வின்தாஸ் ஆழ்வார்குறிச்சி போலீசாரிடம் புகார் செய்தார்.

கள்ளக்காதல் ஜோடி திரும்பினர்

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பால்கிறிஸ்டோபருக்கும், காணிக்கை பிரேமாவுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பால் கிறிஸ்டோபர், காணிக்கை பிரேமா மற்றும் குழந்தைகளுடன் ஊருக்கு வந்தனர். கள்ளக்காதலி குழந்தைகளுடன் பால்கிறிஸ்டோபர் தனது வீட்டில் தங்கியிருந்தார். இதை அறிந்த செல்வின் தாஸ் ஆத்திரமடைந்தார்.

பால்கிறிஸ்டோபர் வீட்டு்்க்கு சென்று மனைவி, மகளை கடத்தி சென்றது குறித்து தட்டி கேட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதலில் பால் கிறிஸ்டோபர், அவருடைய உறவினர்கள் பிரேம் குமார், ராம்தாஸ், ராம்குமார் ஆகியோர் சேர்ந்து செல்வின்தாஸ், அவருடைய உறவினர் ராஜசேகரை அடித்து உதைத்தனர்.

4 பேர் கைது

இதில் காயமடைந்த செல்வின்தாஸ் அம்பை அரசு ஆஸ்பத்திரியிலும், ராஜசேகர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து பால்கிறிஸ்டோபர், பிரேம்குமார், ராம்தாஸ், ராம்குமார் ஆகியோரை கைது செய்தார்.

மேலும் செய்திகள்