சசிகுமார் கொலை வழக்கில் ஓமனில் வசிக்கும் என் மகனை சிக்க வைக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் சதி; கலெக்டரிடம் தந்தை புகார்

சசிகுமார் கொலை வழக்கில் ஓமன் நாட்டில் வசிக்கும் தனது மகனை சிக்க வைக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் சதி செய்வதாக ஷாஜகான் என்பவர் கலெக்டரிடம் புகார் தெரிவித்தார்.

Update: 2018-09-28 23:30 GMT

கோவை,

கோவை இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள், கோவை சாய்பாபா காலனி கே.கே. புதூரை சேர்ந்த முகமது ரபீக்குல் ஹசன் (35) என்பவரது வீடு மற்றும் மர ஆலையில் சோதனை நடத்தினர். மேலும் ஓமன் நாட்டில் உள்ள அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடி உள்ளனர்.

இந்த நிலையில் முகமது ரபீக்குல் ஹசன் தந்தை ஷாஜகான் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

எனது மகன் மர ஆலை நடத்தி வந்தார். இதில் உரிய லாபம் கிடைக்காததால் கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஓமன் நாட்டிற்கு சென்று விட்டார். அங்கு தற்போது குடும்பத்துடன் தங்கியிருந்து பணி புரிகிறார். சசிகுமார் கொலை குறித்து தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் எனது மகனிடம் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் என் மகன் மீது தவறு இல்லை என்று கூறியதுடன், விசாரணையையும் முடித்து கொண்டனர்.

பின்னர் சசிகுமார் கொலை வழக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த மாதம் எனது மகனுக்கு சொந்தமான மர ஆலை மற்றும் எனது வீட்டில் சோதனை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் எனது மகனை அழைக்காத நிலையில் பல முறை விசாரணைக்கு அழைத்து அவர் விசாரணைக்கு ஆஜராகாதது போன்று தகவல்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் பரப்பப்படுகிறது.

மேலும் எனது மகனை கைது செய்ய சர்வதேச போலீசார் உதவியை நாடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனது மகனை விசாரித்து உண்மை நிலையை கண்டறியும் முன்பே யூகத்தின் அடிப்படையில் என் மகன் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.

என்மகன் மீது இதுவரை எவ்வித குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படவோ, நிலுவையிலோ இல்லை. எனவே எனது மகனை எவ்வித விசாரணையும் செய்யாமல் பொய் வழக்குகளில் சிக்க வைக்க திட்டமிட்டு செயல்பட்டு வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்