திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: மாணவர்கள் கல்வியுடன் அனைத்து திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்

மாணவர்கள் கல்வியுடன் அனைத்து திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆ.சுருளியாண்டி, கூறினார்.

Update: 2018-09-28 22:00 GMT
திருச்செந்தூர், 

மாணவர்கள் கல்வியுடன் அனைத்து திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆ.சுருளியாண்டி, கூறினார்.

பட்டமளிப்பு விழா

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 41-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள ஆதித்தனார் நூற்றாண்டு கலையரங்கத்தில் நேற்று மாலையில் நடந்தது. கல்லூரி செயலாளர் சுப்பிரமணியம் தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் வரவேற்று பேசி, கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து பேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆ.சுருளியாண்டி கலந்து கொண்டு, 287 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது;-

திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும்

இந்த காலக்கட்டத்தில் பட்டம் பெறும் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினை பெறுவதற்காக தாங்கள் பெற்ற கல்வி அறிவோடு கட்டாயமாக ஏதாவது ஒரு தொழில் கல்வியினையோ அல்லது திறன் அறிவையோ பெற வேண்டிய அவசியம் உருவாகி உள்ளது. இதனால் மாணவர்கள் கல்வி அறிவோடு அனைத்து திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பட்டதாரியும் தாங்கள் வாழக்கூடிய காலக் கட்டங்களில் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப தங்களை தயார் படுத்தி கொண்டு, தொழில் செய்தால் மட்டுமே மாணவர்களாகிய நீங்கள் உங்கள் வாழ்வில் உன்னத நிலையை அடைவீர்கள்.மாணவர்களாகிய நீங்கள் எதுவாக ஆக வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். பின்னர் அதற்கான அனைத்து திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும்.

வாழ்த்துக்கள்

ஒவ்வொரு பட்டதாரியும் சுயமாக தொழில் செய்யக்கூடிய தொழில் முனைவோராக மாறும் பட்சத்தில்தான் தங்களின் குறைந்தபட்ச சமூக மற்றும் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். தாங்கள் இருக்கின்ற பகுதியின் தேவையை அறிந்து தொழில் செய்தால், உங்களின் அடிப்படை பொருளாதார தேவைகளும் மற்றும் தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றம் அடையும்.

இந்த விழாவில் பட்டம் பெறும் மாணவர்களில் பலர் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வருவீர்கள், பலர் முதுநிலை பட்டப்படிப்பினை படித்து வருவீர்கள், அதே போல் பட்டம் பெற்றும் சுயதொழில் செய்ய, தொடங்க உள்ள முனைவோர்களையும் நான் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

உறுதிமொழி ஏற்பு

முடிவில், கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமையில் பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். இந்த விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைகுருசெல்வி மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்