தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் உரிமம் ரத்து, கலெக்டர் எச்சரிக்கை
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
சிவகங்கை,
உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழுக் கூட்டம் மற்றும் பான்மசாலா, புகையிலை நிகோடின் கலந்த குட்கா தடை அமுல்படுத்துதல் குழுக்கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசியதாவது:–
மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் உணவு விற்பனை உரிமை பெற்ற அனைத்து இடங்களிலும் குழுக்களாக ஆய்வு மேற்கொண்டு தவறுகள் கண்டறியும் இடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக உணவகங்களில் கலப்படப் பொருட்கள் சேர்ப்பதாக வரும் தகவல்களின் அடிப்படையில் உடனடியாக அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு உணவு மாதிரி எடுத்து ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்து அதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கலப்படப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க பொதுமக்களும் உறுதுணையாக இருந்திட வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் செயல்படும் திறந்த வெளி உணவகங்களில் பாதுகாப்பான முறையில் உணவகங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். தவறுகள் கண்டறியப்பட்டால் உணவகங்களின் உரிமைங்கள் ரத்து செய்யப்படும் என அறிவுறுத்த வேண்டும்.
மேலும், தமிழக அரசின் மூலம் பான்மசாலா, புகையிலை நிகோடின் கலந்த குட்கா விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த நிறுவனத்திற்கான உரிமங்களும் ரத்து செய்யப்படும் உணவுத்துறை அலுவலர்கள் குறிப்பாக பள்ளிகள் அருகில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான வாட்ஸ்அப் எண்ணையும் மற்றும் உணவகங்களில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு விளம்பர பலகையையும் கலெக்டர் அறிமுகப்படுத்தி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஜெகதீஸ்சந்திரபோஸ், மாவட்ட சமூகநல அலுவலர் வசந்தா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் உணவக உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.