ஊழியரை கத்தியால் குத்திய பானிபூரி கடை உரிமையாளருக்கு 7 ஆண்டு சிறை; சிவகங்கை கோர்ட்டு உத்தரவு

ஊழியரை கத்தியால் குத்திய பானிபூரி கடை உரிமையாளருக்கு சிவகங்கை கோர்ட்டு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-28 22:30 GMT

சிவகங்கை,

கோயம்பத்துரை அடுத்த உக்கடத்தை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 53). இவர் ஊர்ஊராக சென்று அங்கு நடைபெறும் திருவிழாக்களில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். அவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவை அடுத்த காட்டுபள்ளியை சேர்ந்த யாசர்அராபத்(24) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2017–ம் ஆண்டு ஜூன் மாதம் சாக்கோட்டையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், இஸ்மாயில் பானிபூரிகடை வைத்திருந்தார். அப்போது அவரிடம் வேலை பார்த்த யாசர் அராபத் அவரை விட்டு விலகி வேறு ஒருவரிடம் வேலைக்கு சென்று விட்டாராம்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கடந்த 23.6.2017 அன்று இரவு இஸ்மாயில், கத்தியால் யாசர் அராபத்தை குத்தினாரம். அதில் பலத்த காயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்தார்.

இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் இஸ்மாயிலை கைது செய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி ராதிகா, குற்றம் சாட்டப்பட்ட இஸ்மாயிலுக்கு 7ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்