தனிநபர் கழிப்பறை பயன்பாடு கணக்கெடுப்பு: சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் பணியாளர்கள்
தனிநபர் இல்ல கழிப்பறை பயன்பாடு குறித்து கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பணியாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படாததால் தவித்து வருகின்றனர். சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டத்தில் 450 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு தனிநபர் கழிப்பறை அமைக்க மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.86 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் 72 ஆயிரத்து 70 தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.12 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் யூனியன் அதிகாரிகள் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மனு கொடுத்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வீட்டை ஆய்வு செய்து குறுகிய காலத்தில் மானிய தொகை ரூ.12 ஆயிரத்தை வழங்கி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் கழிப்பறைகளை கட்டி வருகிறார்கள்.
இந்த திட்டத்தில் விருதுநகர் மாவட்டம் சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்த நிலையில் கழிப்பறை இல்லாத வீடுகள் குறித்து கணக்கெடுக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அதற்கென பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வீட்டுக்கு ரூ.4 சம்பளம் என நிர்ணயிக்கப்பட்டது. 350 குடியிருப்புகளுக்கு ஒரு வர் என்ற விகிதத்தில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பல ஆயிரம் வீடுகள் உள்ள பஞ்சாயத்துகளில் கூடுதல் பணியாளர்களை நியமித்து குறுகிய காலத்தில் அந்த பணி சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது.
ஆனால் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு அவர்களுக்குரிய சம்பள பணம் இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பள பணத்தை எதிர்பார்த்து கடந்த சில வாரங்களாக சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு பணியாளர்கள் வந்து செல்கிறார்கள். தவித்து வரும் இவர்கள் சம்பள தொகையை உடனே வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தனிநபர் கழிப்பறை அமைக்க ஊக்கத் தொகை வழங்கும் அரசு, இந்த பணியில் ஈடுபட்டவர்களுக்கு வீடுகளுக்கு தலா ரூ.4 வழங்காதது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.