பெண்களை இழிவாக பேசிய எச்.ராஜாவை கண்டித்து சென்னையில் அறநிலையத்துறையினர் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சென்னை,
இந்து சமய அறநிலையத்துறையை அழித்து விட்டு கோவில்களை கைப்பற்றும் நோக்கத்தில் திட்டமிட்டு செய்யப்படும் பொய் பிரச்சாரத்தை கண்டித்தும், சிலைகள் கடத்தல் என்ற பெயரில் பொய் வழக்கு போட்டு கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்தும், அறநிலையத்துறையில் பணிபுரியும் அலுவலர்களின் வீட்டு பெண்களை இழிவாக பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.
போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். கோவை சரவணப்பட்டி குமரகுருபர சுவாமிகள் ஆதினம் முன்னிலை வகித்தார். அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ம.தி.மு.க. துணைபொதுச்செயலாளர் மல்லைசத்யா, திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை சேர்ந்த பேராசிரியர் சுப.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு உள்பட இணை ஆணையர்கள், துணை உதவி ஆணையர்கள், குருக்கள், பட்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன பொதுச்செயலாளர் எம்.துரைபாண்டியன் பழரசம் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.