பெங்களூருவில் 50 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை ஆயுதங்கள், செல்லாத ரூபாய் நோட்டுகள், துப்பாக்கி பறிமுதல்

பெங்களூருவில் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 50 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அந்த ரவுடிகளின் வீடுகளில் இருந்து ஆயுதங்கள், செல்லாத ரூபாய் நோட்டுகள், துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-09-27 22:45 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 50 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அந்த ரவுடிகளின் வீடுகளில் இருந்து ஆயுதங்கள், செல்லாத ரூபாய் நோட்டுகள், துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டன.

ரவுடிகளின் வீடுகளில் சோதனை

பெங்களூரு நகரில் ரவுடிகளை ஒடுக்கவும், கந்து வட்டி தொழில், சூதாட்டம் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில், கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் உத்தரவின் பேரில் பெங்களூருவில் நேற்று அதிகாலையில் குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் ஹரீஷ் தலைமையிலான போலீசார், 50-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது ரவுடிகளின் வீடுகளில் இருந்து ஆயுதங்கள், நகைகள், வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துணை போலீஸ் கமிஷனர் ஹரீஷ் விசாரணை நடத்தினார். அப்போது அந்த ரவுடிகள் செய்து வரும் தொழில், வட்டி தொழிலில் ஈடுபடுகிறார்களா?, பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்களா? என்பது குறித்து அவர் விசாரித்தார். ரவுடிகளின் வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட நகைகள், பொருட்கள், ஆயுதங்கள் ஆகியவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீஸ் கமிஷனர் சுனில்குமார், கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

11 தனிப்படைகள்

பெங்களூருவில் ரவுடிகளின் அட்டூழியத்தை ஒடுக்கவும், குற்ற சம்பவங்களை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரவுடிகளை ஒடுக்க குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனராக அலோக்குமாரும், துணை போலீஸ் கமிஷனராக ஹரீசும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக 11 தனிப்படைகளை அலோக்குமார் அமைத்துள்ளார். மேலும் கோர்ட்டில் இருந்து 20-க்கும் மேற்பட்ட கைது வாரண்டுகள் பெறப்பட்டுள்ளன.

நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து நகரில் உள்ள ரவுடிகளான லோகேஷ், மஞ்சு, லட்சுமணா, மாஹிம், ஜான்டி, லக்கசந்திரா விஜய், ஜே.சி.ரோடு சங்கர், கொடிகேஹள்ளி அப்பி, ஜே.சி.பி.நாராயணா, பெத்தனகெரே சங்கர், மகேஷ் என்ற தடியா மகேஷ் உள்பட 50-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் ஒரே நேரத்தில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த ரவுடிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

துப்பாக்கி பறிமுதல்

போலீசார் நடத்திய சோதனையின் போது ரவுடிகளின் வீடுகளில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து பத்திரங்கள், 300 கிராம் தங்க நகைகள், காசோலைகள், 3 கார்கள், இருசக்கர வாகனங்கள், 14 செல்போன்கள், ரூ.2¼ லட்சத்திற்கு செல்லாத பழைய 500 ரூபாய் நோட்டுகள், ரூபாய் நோட்டுகளை எண்ணும் 2 எந்திரங்கள், 14 செல்போன்கள், அரிவாள்கள், கத்திகள், ஒரு துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரவுடி தடியா மகேஷ் வீட்டில் தான் துப்பாக்கி சிக்கியுள்ளது.

சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது போலீசாரின் கடமையாகும். அதனால் பொதுமக்களின் அமைதியை கெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற ரவுடிகள் குற்றங்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்