போரூரில் முன்விரோதத்தில் கார் டிரைவர் கடத்தல்; 5 பேர் கைது
போரூரில், முன்விரோதம் காரணமாக கார் டிரைவர் கடத்தப்பட்டார். இந்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
திண்டுக்கல்லை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22). இவருடைய தம்பி உதயகுமார் (20). இவர்கள் இருவரும் சென்னை போரூர் செந்தில்நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி, டிரைவராக வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு இவர்களது வீட்டுக்கு காரில் வந்த 5 பேர் கொண்ட மர்மகும்பல், விக்னேசை சரமாரியாக தாக்கி, தாங்கள் வந்த காரில் கடத்திச்சென்றனர். இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போரூர் உதவி கமிஷனர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விக்னேசை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்டனர்
இதற்கிடையில் டிரைவர் விக்னேசை கடத்திச்சென்ற கார், தாம்பரம் அருகே சென்றுகொண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தாம்பரம் போலீசார், அந்த காரை மடக்கிப் பிடித்தனர். காரில் இருந்த டிரைவர் விக்னேசையும் பத்திரமாக மீட்டனர். மேலும் அந்த காரில் இருந்த 5 பேரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர்.
இதுபற்றி போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போரூர் போலீசார் தாம்பரம் சென்று பிடிபட்ட 5 பேரையும் போரூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
தகராறு
அதில், கடத்தப்பட்ட விக்னேஷ் முதலில் தாம்பரத்தில் உள்ள ஒரு கால் டாக்சி நிறுவனத்தில் தனது நண்பர்களுடன் அங்கேயே தங்கி டிரைவராக வேலை செய்து வந்தார். அப்போது அங்கு பணிபுரியும் கவுதம் என்பவரின் தங்கைக்கு விக்னேஷ் அடிக்கடி செல்போனில் குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்.) மற்றும் முகநூலில் தகவல்கள் அனுப்பி வந்தார்.
இதையறிந்த கவுதம், விக்னேசுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரத்தில் விக்னேஷிடம் இருந்த செல்போனை கவுதம் பறித்துக்கொண்டார். அதன்பிறகு அந்த கால்டாக்சி நிறுவனத்தில் வேலையில் இருந்து நின்றுவிட்ட விக்னேஷ், தனது தம்பியோடு போரூரில் தங்கி வேறு ஒரு இடத்தில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.
கவுதமிடம் ஏற்கனவே விக்னேஷ் பணம் வாங்கி இருந்தார். அந்த பணத்தை தரும்படி கேட்டு நேற்று முன்தினம் விக்னேசை சென்னை விமான நிலையம் அருகே வரும்படி கவுதம் அழைத்தார்.
5 பேர் கைது
அதன்படி அங்கு சென்றபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கவுதமின் கார் சாவியை எடுத்துக்கொண்ட விக்னேஷ், “உன்னால் முடிந்தால் என்னிடம் இருந்து கார் சாவியை நீ வாங்கி விடு பார்க்கலாம்” என்று சவால் விடுத்தார்.
இதையடுத்து நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திகொண்டு இருந்த கவுதம், ஆத்திரம் தாங்க முடியாமல் விக்னேசை ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார். பின்னர் தனது நண்பர்களுடன் காரில் போரூர் வந்து விக்னேசை தாக்கி, காரில் கடத்திச்சென்றார் என்பது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து முன்விரோதம் காரணமாக கார் டிரைவரை கடத்தியதாக திண்டுக்கல்லைச் சேர்ந்த மாரிமுத்து (39), கவுதம் (27), பேசும் முருகன் (38), உசிலம்பட்டியை சேர்ந்த ராஜா (26), சிவா (24) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.