மழைநீர் வடிகால் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி துணை கமிஷனர் தலைமையில் நடந்தது
மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
சென்னை,
விடுபட்ட மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் உள்ள அம்மா மாளிகை அரங்கில் நடந்தது.
கூட்டத்துக்கு துணை கமிஷனர் (பணிகள்) எம்.கோவிந்த ராவ் தலைமை தாங்கினார். சென்னை முழுவதும் சுமார் 117 கி.மீ. நீளத்துக்கு விடுபட்ட மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வதற்காக பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியது.
மழைநீர் வடிகால் பணிகளின்போது தோண்டி எடுக்கப்படும் தூர் மற்றும் மண்ணை, ஒப்பந்த பண நிறுவனம் உடனுக்குடன் அப்புறப்படுத்தவேண்டும். பொதுமக்கள் நுழையாதவாறு இரும்பு தடுப்புகள் அமைக்கவேண்டும். இதுபோன்ற பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த பணிகளை 15 மண்டலங்களிலும் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கண்காணிப்பு உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள். மேலும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே இதற்கான பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில் முதன்மை தலைமை என்ஜினீயர் எம்.புகழேந்தி, மேற்பார்வை என்ஜினீயர் எல்.நந்தகுமார், ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.