மேல்-சபையில் 3 இடங்களுக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 3 பேர் போட்டியின்றி தேர்வு
கர்நாடக மேல்-சபையில் 3 இடங்களுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 3 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடக மேல்-சபையில் 3 இடங்களுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 3 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
3 வேட்பாளர்களின் மனுக்கள்
கர்நாடக மேல்-சபை உறுப்பினர்களாக இருந்தவர்கள் பரமேஸ்வர், ஈசுவரப்பா, சோமண்ணா. சட்டசபை தேர்தலில் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அந்த மூன்று இடங்கள் மேல்-சபையில் காலியாக இருந்தன. அந்த 3 இடங்களுக்கு அக்டோபர் 4-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இதில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து, 2 இடங்கள் காங்கிரசுக்கும், ஒரு இடம் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கும் ஒதுக்கப்பட்டன.
காங்கிரஸ் சார்பில் வேணுகோபால், நசீர்அகமது மற்றும் ஜனதா தளம்(எஸ்) சார்பில் ரமேஷ்கவுடா ஆகிய மூன்று பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த மூன்று பேரை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. பா.ஜனதா கட்சி கடைசி நேரத்தில் போட்டியிடும் முடிவை கைவிட்டது. இதையடுத்து 3 வேட்பாளர்களின் மனுக்களும் சரியாக இருப்பதாக கூறி ஏற்கப்பட்டன.
வாபஸ் பெறவில்லை
மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். வேட்பாளர்கள் யாரும் மனுவை வாபஸ் பெறவில்லை. 3 இடங்களுக்கு 3 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர். இதையடுத்து, அந்த 3 வேட்பாளர்களும் போட்டியின்றி மேல்-சபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி குமாரசாமி நேற்று மாலை அறிவித்தார்.
அவர்கள் 3 பேருக்கும் அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி வழங்கினார். இந்த இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட தகுதி படைத்தவர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.