ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு: மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

தாராபுரத்தில் ரூ.30 லட்சம் நகை திருட்டு நடந்த ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி விசாரணை நடத்தினார்.

Update: 2018-09-27 23:00 GMT
தாராபுரம்,

தாராபுரம் அலங்கியம் ரோட்டில் வசிப்பவர் ராமலிங்கம் (வயது 72) இவர் ஜவுளிக்கடை வீதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சிகிச்சைக்காக கடந்த 24-ந்தேதி திருப்பூரில் உள்ள பல் மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்றுள்ளார். சிகிச்சை முடிந்ததும் அங்கிருந்த தன்னுடைய மகள் வீட்டிற்குச் சென்று தங்கி இருந்துவிட்டு, மறுநாள் இரவுவீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பாக கதவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த ராமலிங்கம் மனைவியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். வீட்டில் வைத்திருந்த பீரோ மற்றும் லாக்கர் ஆகியவற்றை மர்ம நபர்கள் உடைத்து, அதில் வைத்திருந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள வைரநகைகள் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நேற்று முன்தினம் ராமலிங்கம் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, திருட்டு நடந்த ராமலிங்கம் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து, திருட்டுப் போன பொருட்களை மீட்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் ஒரு தனிப்படையும், சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் ஒரு தனிப்படையும், சப்-இன்ஸ்பெக்டர் தனபால் தலைமையில் ஒரு தனிப்படையும் என 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படைகள் திருச்சி, மதுரை, சேலம் ஆகிய பகுதிகளுக்கு திருடியவர்களை தேடிச்சென்றுள்ளனர். விசாரணை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கேட்டபோது, விரைவில் திருடர்கள் கைது செய்யப்படுவார்கள். அதன் பிறகு திருட்டுப்போன நகைகள் மீட்கப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்