ஓமலூர் அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயர் பலி

ஓமலூர் அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயர் பலியானார்.

Update: 2018-09-26 23:29 GMT
ஓமலூர்,

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த சர்க்கரைசெட்டிப்பட்டி ஊராட்சி கோபிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன் (வயது 42). இவர் சேலத்தில் உள்ள தனியார் கிரானைட் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு கோபிநாதபுரத்தில் சொந்தமாக விவசாய நிலமும் உள்ளது. நேற்று காலையில் இவர் தனது விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மஞ்சள் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்தார்.

விவசாய நிலத்தின் நடுவே ஒரு மின்சார கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் தாங்கு கம்பிகள் (ஸ்டே கம்பிகள்) விவசாய நிலத்தில் நடப்பட்டு இருந்தன. அவர் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டே தனது நிலத்தில் நடப்பட்டிருந்த மின்கம்பத்தின் தாங்கு கம்பி அருகே வந்து அதை தொட்டார்.

இந்த தாங்கு கம்பியில் கசிந்து கொண்டிருந்த மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு செங்கோடன் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அந்த பகுதியில் நின்றவர்கள் உடனடியாக அருகில் உள்ள மின்சார மாற்றியில் மின் இணைப்பை துண்டித்தனர்.

பின்னர் மயங்கி கிடந்த அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், செங்கோடன் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சார கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து தாங்கு கம்பியில் தொங்கியதால் மின்கசிவு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி பலியான செங்கோடனுக்கு, வெண்ணிலா (33) என்ற மனைவியும், சன்மதி(14), தரணிகா(8), என்ற 2 மகள்களும், சர்வேஸ் (5) என்ற மகனும் உள்ளனர்.


மேலும் செய்திகள்