பயந்தரில் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
பயந்தரில் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.3 லட்சம் நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வசாய்,
பயந்தரில் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.3 லட்சம் நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை, பணம் மாயம்
தானே மாவட்டம் பயந்தர் சாந்தி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் குந்தன் ஜெய்ஸ்வால். இவர் சம்பவத்தன்று மாலை மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வெளியில் சென்றிருந்தார். பின்னர் இரவு வீடு திரும்பிய போது, கதவு திறந்து கிடந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அறையில் இருக்கும் பொருட்கள் அங்கும், இங்குமாக சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த நகை, பணம் காணாமல் போயிருந்தன.
போலீஸ் விசாரணை
குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்த நேரத்தில் மர்மஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து அவற்றை திருடி சென்றிருந்தது தெரியவந்தது. திருட்டு போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த குந்தன் ஜெய்ஸ்வால் சம்பவம் குறித்து நயாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.