துப்புரவுத்தொழிலாளர்கள் மனு கொடுக்க முயன்றதால் பரபரப்பு

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த உறுதிமொழி கூட்டத்தில் துப்புரவு தொழிலாளர்கள் மனு கொடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Update: 2018-09-26 22:30 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உறுதிமொழி குழு ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஆய்வு குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு மாநகராட்சியின் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் ஏராளமானோர் உறுதிமொழி குழுவிடம் மனு கொடுப்பதற்காக கூட்ட அரங்கின் உள்ளே நுழைய முயன்றனர்.

ஆனால் அவர்களை உள்ளே செல்ல விடாமல் அங்கு நின்று கொண்டிருந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். மேலும், தங்களிடமே அந்த மனுக்களை கொடுக்கும் படியும், உடனடியாக அதற்கு தீர்வுகாணப்படும் என்றும் கூறினார்கள். ஆனால் அதை ஏற்று கொள்ளாத துப்புரவு தொழிலாளர் மனுவை உறுதிமொழி குழுவிடம் கொடுக்க வேண்டும் என்று கூறி கூட்ட அரங்கின் வெளியில் முற்றுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்ட அரங்கின் வெளியிலேயே வைத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் இருந்த மனுவை பெற்று கொண்டனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியில் சுமார் 500 துப்புரவு தொழிலாளர்கள் மட்டுமே வேலைசெய்கின்றனர். திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகள் உள்ளது. மறுசீரமைப்பின் படி மொத்தம் 72 வார்டுகள் என மேம்படுத்தப்பட உள்ளது. தற்போது திருப்பூரில் எந்த திசையில் பார்த்தாலும் குப்பை மேடாக தான் காட்சியளிக்கிறது. திருப்பூரில் இருந்து நாள்தோறும் சுமார் 500 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் இடுவாய் கிராமத்தில் உள்ள 22 ஏக்கர் நிலத்தில் கொட்டி அங்கு மறுசுழற்சிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்பைகளை தரம்பிரிக்க ஆண்கள், பெண்கள் என 75 பேர் கொண்ட ஒரு குழு ஒன்றை அமைக்க வேண்டும். இதற்கு 2 ஆய்வாளர்கள், 3 மேற்பார்வையாளர்களை நியமனம் செய்ய வேண்டும். குப்பை அகற்றும் வண்டிகளை பழுது நீக்குவதற்காக தொழில்நுட்ப வல்லுனர்களை நியமிக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டிக்கு திருப்பூரை தேர்வு செய்த மத்திய அரசிடம் பணியாளர்களின் ஊதியத்தை கணக்கிட்டு சிறப்பு நிதி பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள், மனுமீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துப்புரவு பணியாளர்களை சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்