பெங்களூருவில் பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கணவர் கைது
பெங்களூருவில் பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு,
பெங்களூருவில் பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார். நிலத்தை அபகரிக்க முதியவரை கொன்றதை தெரிந்து கொண்டதால், அவர் மனைவியை தீர்த்துக்கட்டினார். இதில் தொடர்புடைய மேலும் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பெண் தற்கொலை
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை அருகே நிம்பேகாய்புரா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி. இவரது மனைவி சுதாராணி. ரியல்எஸ்டேட் அதிபரான ரமேஷ் என்பவரிடம் வெங்கடசாமி ஊழியராக வேலை செய்தார். இதற்கிடையில், கடந்த 18-ந் தேதி தனது வீட்டில் சுதாராணி, உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் ஒசக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுதாராணியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி தீக்குளித்து தற்கொலை செய்திருப்பதாக போலீசாரிடம் வெங்கடசாமி கூறினார். ஆனால் சுதாராணி சாவில் மர்மம் இருப்பதாக, அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, சுதாராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஒசக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொலை
இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் சுதாராணி தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக வெங்கடசாமியை பிடித்து போலீசார் விசாரித்தனர். முதலில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப தகராறில் தனது மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்து, உடலை எரித்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது உரிமையாளரான ரியல்எஸ்டேட் அதிபர் ரமேசுடன் சேர்ந்து கோலார் மாவட்டம் முல்பாகலை சேர்ந்த கிருஷ்ணப்பா(வயது 65) என்பவரையும் வெங்கடசாமி கொலை செய்திருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, ரியல்எஸ்டேட் அதிபரான ரமேசை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது கிருஷ்ணப்பா கொலை செய்யப்பட்டது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியானது.
முதியவரை கொன்றனர்
அதாவது ரியல்எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ள ரமேஷ், சில புறம்போக்கு நிலங்களை போலி ஆவணங்கள் தயாரித்து தனது பெயருக்கு மாற்றி விற்பனை செய்து வந்துள்ளார். அதன்படி, பெல்லந்தூர் அருகே யாரும் உரிமை கோராத நிலையில் ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலம் இருந்துள்ளது. அதுபற்றி தகவல்களை ரமேஷ் மற்றும் வெங்கடசாமி சேகரித்துள்ளனர். அப்போது கடந்த 1926-ம் ஆண்டில் அந்த நிலம் மைசூரு மன்னர் குடும்பத்தை சேர்ந்த நஞ்சப்பா என்பவரின் பெயரில் இருப்பது 2 பேருக்கும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிலத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க ரமேஷ் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக முல்பாகலை சேர்ந்த முதியவரான கிருஷ்ணப்பாவுக்கு வயிற்றுபோக்கு மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக குளிர்பானத்தில் கலந்து கொடுத்துள்ளனர். இதனால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவர் இறந்துள்ளார். பின்னர் தனக்கு தெரிந்த டாக்டரான குல்கர்னி என்பவரை சந்தித்து கிருஷ்ணப்பா இறந்து விட்டதாகவும், அவர் பெயருக்கு பதில் நஞ்சப்பா என்பவரின் பெயரில் போலியான இறப்பு சான்றிதழ் கொடுக்கும்படி ரமேஷ் கேட்டுள்ளார். அதன்படி, அவரும் நஞ்சப்பா பெயரில் போலி இறப்பு சான்றிதழ் கொடுத்துள்ளார். பின்னர் கிருஷ்ணப்பாவின் உடலை ரமேஷ், வெங்கடசாமி உள்ளிட்டோர் சேர்ந்து எரித்துள்ளனர்.
ரூ.15 கோடி மதிப்பு
அதே நேரத்தில் நஞ்சப்பாவின் பெயரில் உள்ள நிலத்தை அபகரிக்க போலியான சொத்து பத்திரங்களை ரமேஷ் தயாரித்துள்ளார். இதற்கு தனஞ்செயா, கிருஷ்ணா, கிருஷ்ணமூர்த்தி, கேசவமூர்த்தி உள்ளிட்டோர் உதவி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணப்பாவை கொலை செய்ததாகவும், நிலத்தை அபகரிக்க ரமேஷ், வெங்கடசாமிக்கு உதவியதாக டாக்டர் குல்கர்னி, தனஞ்செயா, கிருஷ்ணா, கிருஷ்ணமூர்த்தி, கேசவமூர்த்தி, வெங்கடேஷ், சங்கப்பா ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டார்கள். கைதான 9 பேரிடம் இருந்து போலி ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெல்லந்தூரில் உள்ள அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 9 பேர் மீதும் ஒசக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த இரட்டை கொலை மற்றும் ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.