மூதாட்டி வெட்டிக்கொலை : விவசாயி கைது

மோகனூர் அருகே மூதாட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-26 21:30 GMT
மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள குமரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓடப்பாளையம் பிரிவு ரோட்டைச் சேர்ந்தவர் சின்னகவுண்டர் மகன் நல்லுசாமி (வயது 77), விவசாயி. இவரது மனைவி பாப்பாயி (70). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.

கணவன், மனைவி இருவரும் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்திலேயே வீடு கட்டி வசித்து வந்தனர். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மனைவி ராமாயி (65) என்பவருக்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நல்லுசாமி தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது பொதுவான தடத்தில் ராமாயி புற்களை வெட்டிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு சென்ற நல்லுசாமி, ராமாயியிடம் பொதுவான தடத்தில் எதற்காக புற்களை வெட்டி கொண்டு இருக்கின்றாய் என கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் நல்லுசாமி வீட்டுக்கு சென்று விட்டார். மீண்டும் சிறிது நேரம் கழித்து அவர் தோட்டத்திற்கு வந்த போது இருவருக்கும் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு முற்றியதில், ஆத்திரம் அடைந்த நல்லுசாமி தான் வைத்திருந்த கொடுவாளால் ராமாயியின் இரண்டு கைகளிலும், கழுத்திலும் வெட்டியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த ராமாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து ராமாயியின் மகன் லோகநாதன் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விவசாயி நல்லுசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்