காரில் கடத்தி வரப்பட்ட 744 மதுபாட்டில்கள் பறிமுதல்
கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 744 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
கோட்டக்குப்பத்தை அடுத்த கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் ஏட்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை சந்தேகத்தின்பேரில் போலீசார் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் காரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதில் வந்த 2 பேர் தப்பி ஓடினர். உடனே போலீசார் விரட்டிச்சென்று ஒருவரை பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து அந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அதில், 16 அட்டைப்பெட்டிகளில் 744 மதுபாட்டில்கள் இருந்தன. தொடர்ந்து, பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கார் டிரைவர் என்பதும், புதுச்சேரி மாநிலம் முத்திரையர்பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 34) என்பதும், தப்பி ஓடியவர் புதுச்சேரி காந்தி நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பதும், புதுச்சேரியில் இருந்து மரக்காணம் பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ராமச்சந்திரனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பன்னீர்செல்வத்தை தேடி வருகின்றனர்.