இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியை கொன்ற வழக்கில் கொலையாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்

பெங்களூருவில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியை கொன்ற வழக்கில் கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

Update: 2018-09-26 22:00 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியை கொன்ற வழக்கில் கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

கொலை

பெங்களூரு அல்லாலசந்திரா அருகே வசித்து வந்தவர் அருண்குமார் என்ற அருண் (வயது 27). காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், இளைஞர் காங்கிரசின் அல்லாலசந்திரா பிளாக் தலைவராக இருந்து வந்தார். ரியல்எஸ்டேட் மற்றும் வட்டி தொழிலிலும் அருண்குமார் ஈடுபட்டு வந்தார். கடந்த 23-ந் தேதி நள்ளிரவு தனது நண்பர்களுடன் சினிமா பார்க்க சென்றுவிட்டு அல்லால சந்திரா கேட் பகுதியில் காரில் வந்து அவர் இறங்கினார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அருண் குமாரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், அருண்குமாரை அல்லாலசந்திராவை சேர்ந்த மனோஜ் என்ற கெஞ்சா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தீர்த்து கட்டியது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த மனோஜை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் பெங்களூரு விமான நிலைய ரோடு அருகே சர்ஜாபுரா சர்வீஸ் சாலையில் மனோஜ் தனது கூட்டாளியுடன் காரில் செல்வதாக எலகங்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சேகவுடாவுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர், வித்யாரண்யபுரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீஸ்காரர்களுடன் அங்கு விரைந்து சென்றார். பின்னர் சர்ஜாபுரா சர்வீஸ் ரோட்டில் வைத்து மனோஜ் வந்த காரை போலீசார் சுற்றி வளைத்தார்கள். மேலும் போலீஸ்காரர்கள் உதய்குமார், மகாதேவமூர்த்தி ஆகிய 2 பேரும் சேர்ந்து மனோஜ், அவரது கூட்டாளியை பிடிக்க முயன்றனர்.

அப்போது அவர்களை மனோஜ் தன்னிடம் இருந்த ஆயுதத்தால் தாக்கியதுடன், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதில், போலீஸ்காரர்கள் உதய்குமார், மகாதேவமூர்த்தி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மனோஜை சரண் அடைந்து விடும்படி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இன்ஸ்பெக்டர் மஞ்சேகவுடா, ராமமூர்த்தி ஆகியோர் எச்சரித்தனர். ஆனால் அவர் சரண் அடைய மறுத்து விட்டார். அதே நேரத்தில் இன்ஸ்பெக்டர்களை தாக்க முயன்றதுடன், அங்கிருந்து அவர் தப்பி ஓடுவதற்கு முயற்சித்தார்.

சுட்டுப்பிடித்தனர்

இதனால் இன்ஸ்பெக்டர்கள் மஞ்சேகவுடா, ராமமூர்த்தி ஆகியோர் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் மனோஜை நோக்கி தலா ஒரு ரவுண்டு சுட்டார்கள். இதில், மனோஜின் கையில் ஒரு குண்டும், காலில் மற்றொரு குண்டும் துளைத்தது. இதன் காரணமாக அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து துடிதுடித்தார். உடனே மனோஜை போலீசார் கைது செய்தார்கள். அதுபோல, அவரது கூட்டாளியான மஞ்சு என்ற மஞ்சேகவுடா(23) என்பவரும் கைது செய்யப்பட்டார். மனோஜ் விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல, போலீஸ்காரர்கள் உதய்குமார், மகாதேவமூர்த்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். முன்னதாக இதுபற்றி அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர் கலா கிருஷ்ணசாமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது கைதான மனோஜ் மீது கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் ஏற்கனவே இருப்பதும், அரசியலில் அருண்குமார் வேகமாக வளர்ந்து வருவது பிடிக்காமல் அவரை தீர்த்துக்கட்டியதும் தெரியவந்தது. இருப்பினும் கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் மனோஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சர்ஜாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெங்களூருவில் கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்